கப்பலூர் தொழிற்பேட்டையில் பூட்டி கிடக்கும் முதலுதவி சிகிச்சை மையம்

கப்பலூர் தொழிற்பேட்டையில் பூட்டி கிடக்கும் முதலுதவி சிகிச்சை மையத்தை செயல்பட வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Update: 2017-10-21 23:15 GMT
திருமங்கலம்,

மதுரையை அடுத்த கப்பலூரில் சிறுதொழில் முதலீட்டு கழகம் சார்பாக தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு அங்கு கார் விற்பனை நிலையங்கள், கட்டுமான நிறுவனம், பிளாஸ்டிக் கம்பெனிகள், நூல் மில்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. அதில் திருமங்கலம், மதுரை பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த தொழிற்பேட்டையின் அருகே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது அதனையொட்டி துணை கோள் நகரம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பேட்டையில் பணியாற்றும் பணியாளர்கள் வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை பெற திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தான் செல்ல வேண்டும்.

மேலும் இந்த ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் முன்பாக, விபத்தில் காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சை பெறமுடியாத நிலை இருந்தது. அதை போக்க நெடுஞ்சாலையையொட்டி தமிழ்நாடு சிறு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் முதலுதவி சிகிச்சை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி ஓராண்டுக்கு மேல் ஆகியும், எந்த ஒரு செயல்பாட்டுக்கும் வராமல், இந்த மையம் பூட்டியே கிடப்பதாக தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர்.

லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட விபத்து முதலுதவி சிகிச்சை மையம் பூட்டி கிடப்பது வேதனையளிப்பதாகவும், அதை சமூக ஆர்வலர்கள், சிறுதொழில் முதலீட்டார்கள் சங்கம் சார்பில் டாக்டர் ஒருவரை நியமித்து நோயாளிகளுக்கு சிகிச்சையும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவியும் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்