தஞ்சையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

தஞ்சையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-10-21 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தஞ்சை பெரிய கோவில் முன்பு, மாநகராட்சியின் சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரு சக்கர வாகன கொசு மருந்து அடிக்கும் குழு செயல்படும் முறை குறித்தும் வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டறிந்தார். பின்னர் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்காக உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியினை பார்வையிட்டு, தொட்டி முறையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளதா? எனவும், தண்ணீர் குளோரின் செய்யும் முறை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டார்.

மருத்துவகல்லூரி சாலையில் உள்ள துளசியாபுரம் 3-வது தெருவில் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடையே டெங்கு கொசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி, டெங்கு கொசு உருவாகும் முறை குறித்தும், அதிலிருந்து நம்மை பாதுகாப்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் பொதுமக்களிடம் எடுத்துக்கூறினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இந்த ஆய்வின் போது பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், நகர் நல அலுவலர் நமச்சிவாயம், தாசில்தார் தங்கபிரபாகரன் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்