இரு தரப்பினருக்கு இடையே மோதல்: தப்பியோடிய ஜவுளிக்கடை ஊழியர் கிணற்றுக்குள் பிணமாக மீட்பு

கன்னிவாடி அருகே, இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலின் போது தப்பியோடிய ஜவுளிக்கடை ஊழியர் கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-21 23:15 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆலந்தூரான்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மகன் மகுடீஸ்வரன் (வயது 20). நேற்று முன்தினம் இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (19), அய்யனார் (20) ஆகியோருடன் ஆலந்தூரான்பட்டி சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆலந்தூரான்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (22), அருள்முரளி (17), விக்னேஷ்வரன் (17), பாஸ்கரன் (42) மற்றும் அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவரான சுந்தரேசன் (32) ஆகியோர் மோட்டார்சைக்கிள்களில்வந்தனர்.

இந்த நிலையில் சாலையை மறைத்தபடி மகுடீஸ்வரனும் அவருடைய நண்பர்களும் நடந்து சென்றதாகவும், சாலையோரத்தில் செல்லும்படி மணிகண்டன் தரப்பினர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் இரவில் சுந்தரேசனுடன், டிராக்டரில் மணிகண்டன் மற்றும் நண்பர்கள் ஆலந்தூரான்பட்டியில் உள்ள வயல்வெளியில் குப்பை கொட்ட சென்றனர். அப்போது அங்கு சென்ற மகுடீஸ்வரன் தரப்பினர் மணிகண்டன் தரப்பினருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை ஊழியரான நசுமுதீன் (18), அப்துல்முகமது (18), சுபேர்அலி (19) ஆகியோருக்கு செல்போனில் மகுடீஸ்வரன் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று மணிகண்டன் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர். மோதல் முற்றிய நிலையில் மகுடீஸ்வரன் தரப்பினர் மணிகண்டன் தரப்பினரை தாக்கிவிட்டு தப்பியோடினர்.

இந்தநிலையில் நண்பரை பார்த்து வருவதாக கூறிச்சென்ற நசுமுதீன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பதற்றம் அடைந்து அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது ஆலந்தூரான்பட்டியை சேர்ந்த வீரமுத்து என்பவரின் தோட்டத்து கிணற்றில் அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நசுமுதீன் இறந்தது குறித்து தகவலறிந்த அவருடைய உறவினர்கள் கன்னிவாடி பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல்அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நசுமுதீனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவருடைய உடலை வாங்க மாட்டோம் என நசுமுதீனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய போலீசார், நசுமுதீன் தப்பியோடும் போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இது தொடர்பாக மணிகண்டன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணையின் முடிவில், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றனர். இதில் சமாதானமடைந்த நசுமுதீனின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்