போலீஸ் துறை சிறப்பாக இருந்தால் தான் வளர்ச்சி பணிகளை அரசு மேற்கொள்ள முடியும்

போலீஸ் துறை சிறப்பாக இருந்தால் தான் வளர்ச்சி பணிகளை அரசு மேற்கொள்ள முடியும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-21 23:30 GMT
பெங்களூரு,

போலீஸ் துறையில் பணியாற்றி வீரமரணமடைந்த போலீசாரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேப் போல் போலீஸ் துறையில் பணியின் போது உயிர் இழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி பெங்களூரு கோரமங்களாவில் உள்ள கர்நாடக ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி சித்தராமையா, பணியின் போது உயிர் இழந்த போலீசாரை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு, முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் 24 மணிநேரமும் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். மேலும் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் போலீசாரின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அதனை அரசு தவறாமல் செய்து வருகிறது.

போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குடியிருப்புகள், போலீசாருக்கு என்று குறைந்த விலையில் பொருட்கள் வாங்கி கொள்ள கேன்டீன் வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. போலீசாரின் பிள்ளைகள் படிப்புக்கு தேவையான வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது 370 போலீசார் உயிர் இழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் 12 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக மாநில மக்கள் சார்பில் நான் அஞ்சலி செலுத்தி உள்ளேன். இந்த தருணத்தில் உயிர் இழந்த போலீசாரின் குடும்பத்தினருக்காக வேண்டிக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியே போலீஸ் துறையை பொறுத்து தான் உள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறாது. போலீஸ் துறை சிறப்பாக இருந்தால் தான் வளர்ச்சி பணிகளை அரசு மேற்கொள்ள முடியும்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு போலீசாருக்கு இருக்கிறது. போலீசார் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். போலீஸ் துறையில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும். ஒரு குற்றவாளியை கைது செய்தால் மட்டும் போதாது, அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதும் போலீசாரின் கடமை ஆகும். அப்போது தான் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும். அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். ஒரு சில வழக்குகளில் விசாரணை தகவல்களை உடனடியாக வெளியிட முடியாது. இதற்கு பத்திரிகையாளர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி, மாநில போலீஸ் டி.ஜி.பி.ஆர்.கே.தத்தா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்