அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை 2 நாட்களில் சுத்தம் செய்யாவிட்டால் தனியார் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை 2 நாட்களில் சுத்தம் செய்யாவிட்டால் தனியார் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரித்தார்.;

Update:2017-10-22 04:30 IST
சேலம்,

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக தினமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்பத்திரியை எப்போதும் சுகாதாரமாகவும், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவில்லாமல் இருக்க வேண்டும் எனவும் சமீபத்தில் ஆஸ்பத்திரியை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டீன் கனகராஜூக்கு அறிவுறுத்தி சென்றார்.க்ஷ

ஆனாலும், ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் ஆஸ்பத்திரியை சுத்தமாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனம் முறையாக பணியை மேற்கொள்ளவில்லை என்றும், துப்புரவு பணிக்காக மாதம் ரூ.70 லட்சம் ஒப்பந்ததாரர்கள் பெற்றும் அலட்சியம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன.

ஏற்கனவே, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்து சுகாதார சீர்கேடு இல்லாமல் பார்த்து கொள்ள அறிவுறுத்தினார். ஆஸ்பத்திரி வளாகத்தில் டீ கப் மற்றும் இதர பொருட்கள் வீசப்பட்டிருந்ததை அவரே சேகரித்து அப்புறப்படுத்தினார்.

இந்த நிலையில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வளாகத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டார். உடனடியாக, அவற்றை அகற்ற உத்தரவிட்டார். மாநகராட்சி சிறப்பு பணியாளர்களால் உடனடியாக அவை அகற்றப்பட்டது. அங்கிருந்த தனியார் ஒப்பந்ததாரரிடம் தினமும் ஆஸ்பத்திரியை சுத்தப்படுத்தும் பணிக்கு எத்தனை பேர் வருகிறார்கள்? என கேட்டறிந்தார். அதற்கு சரியான பதில் கூறவில்லை.

மேலும் ஆஸ்பத்திரியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய முகாந்திரம் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் வளாகத்தில் உள்ள உறைகிணறு ஒன்றிலும் கலெக்டர் ரோகிணி ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பிரபாகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார சீர்கேடு நிலவுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இன்னும் 2 நாட்களுக்குள் 100 சதவீதம் ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தம் செய்யாவிட்டால், தனியார் துப்புரவு பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக காய்ச்சலின் அளவு படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. எனினும் பருவகால மாற்றத்தின் காரணமாக மழை பெய்யும் சூழ்நிலையில் நோய்களை பரப்பக்கூடிய கொசுக்கள் உருவாகாத வகையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்