திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ–மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 253 மாணவ–மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுநதரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் குறைப்பிற்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பேரணியில் தானும் கலந்து கொண்டு சென்றார். இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்றது. பேரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் என 200–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 1,291 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வீடுகளுக்கு ஒரு நபர் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களின் முக்கிய பணி வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சுற்றுப்புறங்களில் உள்ள மாசுகளால் ஏற்படக்கூடிய காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
கூரை வீடுகளின் மேல் உள்ள தார்ப்பாயில் நீர் தேங்குவதாலும், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடாமல் உள்ளதாலும் ஏற்படும் ஆபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் தாங்களாகவே மருந்து உட்கொள்வதை தவிர்த்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற்று கொள்ளவேண்டும். மாவட்டத்தில் 26 இடங்களில் ரத்த மாதிரியை ஆய்வு செய்யும் நவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தங்கள் பணிகளை சரிவர செய்யாத 86 கொசு ஓழிப்பு பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 52 டன் அளவிலான தேவையற்ற டயர்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேட்டினால் பொதுசுகாதார சட்ட விதிகளின் படி 1,484 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 200 அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரை அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 253 மாணவ–மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நிலவேம்பு குடிநீர் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யவேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும்.
பின்னர் அவர் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, பயிற்சி உதவி கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, அலுவலக பொதுமேலாளர் கணேசன், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.