புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக பள்ளி– வீடுகளுக்கு அபராதம்

புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டதாக பள்ளிக்கூடத்துக்கு ரூ.50 ஆயிரமும், 6 வீடுகளுக்கு தலா 5000 வீதம் 30 ஆயிரம் ரூபாயும் அபராதம்

Update: 2017-10-21 20:30 GMT

புளியங்குடி,

புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டதாக பள்ளிக்கூடத்துக்கு ரூ.50 ஆயிரமும், 6 வீடுகளுக்கு தலா 5000 வீதம் 30 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு தடுப்பு குழுவினர் ஆய்வு

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவுப்படி புளியங்குடியில் நகரசபை ஆணையாளர் பவுன்ராஜ் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர், ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குழுவினர் பள்ளிகள், அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுக்க தொட்டிகளிலும், சுற்றுப்புறங்களிலும் மருந்துகளை தெளித்து பணிபுரிந்து வருகின்றனர்.

ஆய்வின்போது, தேவர் கிணற்றுத்தெருவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் தொட்டியில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய ஏடீஸ் வகை கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அபராதம் விதிப்பு

இதனை தொடர்ந்து அப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதே போல் கொசுப்புழு கண்டறியப்பட்ட 6 வீடுகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆணையாளர் பவுன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் சுத்தமாக பராமரித்துக்கொள்ள வேண்டும். இது தவறும் பட்சத்தில் ரூ.5000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும், 6 மாதம் சிறைத்தண்டனையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ள வரும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்