கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தகவல்

தடுப்பு நடவடிக்கையால் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

Update: 2017-10-20 23:46 GMT
கடலூர்,

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் நகராட்சிக்குப்பட்ட வண்ணாரப்பாளையம், புதுப்பாளையம் மற்றும் கோண்டூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் பரவ காரணமான ஏடிஸ் கொசுப்புழு இருக்கும் இடத்தை கண்டறியும் வகையில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வீடு வீடாக சென்று ஆய்வு செய்து உபயோகமற்ற பொருட்களை அதிகாரிகள், ஊழியர்களுடன் அப்புறப்படுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்கும் இடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களான பழைய டயர், பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 5 நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த வகையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 250 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.

எனவே சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்துமாறு தெரிவித்தால் அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அப்போது நகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குர்ஷித்பேகம், சாரதி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜகணபதி, சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், ஆய்வாளர்கள் தாமோதரன், பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்