வில்லியனூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

வில்லியனூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-20 23:02 GMT

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கூடப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி நிவேதா (வயது 24). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் நிவேதா மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அடிக்கடி உடல் நலனும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் தீபாவளி தினத்தன்று நிவேதாவும், செந்தில்குமாரும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். பின்னர் அன்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

நேற்று முன்தினம் காலை செந்தில்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கூரையில் நிவேதா சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் நிவேதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேர அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நிவேதாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேல் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்