மக்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்

மக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2017-10-20 22:57 GMT

புதுச்சேரி,

புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினை தடுக்கும் விதமாக நெல்லிதோப்பு தொகுதியில் நிலவேம்பு கஷாயம் கொடுக்கும் நிகழ்ச்சியினை அண்ணாநகரில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். மேலும் கொசுமருந்து அடிக்கும் பணிகளையும் அவர் தொடங்கினார்.

அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக 10 மூலிகைகள் அடங்கிய நிலவேம்பு கஷாயம் தற்போது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர்.

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவர்கள் குறித்து மீண்டும் ஆய்வு மேற்கொண்டேன். காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 40 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த தேவையான மருந்துகள் நம்மிடம் போதுமான அளவில் உள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. எனவே வீடுகளில் நல்ல குடிநீர் ஆனாலும் நீண்ட நாட்கள் வைத்திருக்கவேண்டாம். மக்கள் தங்கள் இல்லங்களிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தூய்மையாக இல்லாத காலிமனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்