மங்களூரு சிறையில் ஒரு கைதி, மற்றொரு கைதிக்கு ‘மசாஜ்’ சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு

மங்களூரு சிறையில் ஒரு கைதி, மற்றொரு கைதிக்கு ‘மசாஜ்’ செய்துவிடுவது போன்று சமூக வலைத்தளங்களில்

Update: 2017-10-20 22:37 GMT

மங்களூரு,

வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூருவில் உள்ள பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகளும், வசதிகளும் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.

இதேபோல் மங்களூரு, பெலகாவி உள்பட கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளிலும் போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு கைதிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மங்களூரு சிறையில் கைதிகள் பிறந்தநாள் கொண்டாடியதுபோல் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமல்லாமல் மங்களூரு சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது, கஞ்சா கடத்திச் செல்வது, கைதிகள் செல்போன் பயன்படுத்துவது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும், அது குறைந்தபாடில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மங்களூரு சிறையில் கைதி ஒருவருக்கு மற்றொரு கைதி ‘மசாஜ்’ செய்து விடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழே ஒய்யாரமாக படுத்திருக்கும் அந்த கைதி, மற்றொரு கைதியை மசாஜ் செய்துவிடும் படியும், தனது கை–கால்களை நன்றாக அமுக்கி விடும்படியும் கட்டளையிடுகிறார். அவருடைய கட்டளைக்கு பயந்து மற்றொரு கைதி, அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார். இதுபோன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கைதிகளிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்று கைதிகள் அனைவரும் கூறினர். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறையில் நடக்கும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார்கள்.

சிறையில் கைதி ஒருவருக்கு, மற்றொரு கைதி மசாஜ் செய்துவிடுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லை. இதனால் அந்த வீடியோவில் இருப்பது யார், யார் என்று தெரியவில்லை.

தனக்கு நன்றாக மசாஜ் செய்துவிடும்படி அந்த கைதி, மற்றொரு கைதிக்கு கட்டளையிடுவது கண்கூடாக தெரிகிறது. அவர் யார் என்று விசாரித்து வருகிறோம். விரைவில் அவர் பிடிபடுவார்.

ரவுடி, முக்கிய கைதிகள், பழைய கைதிகள் போன்றவர்கள் புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை ராக்கிங் செய்து அடிமைபோல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. புதிய கைதிகளிடம், அவர்கள் தங்களுடைய துணிகளை சலவை செய்து தரச்சொல்வது, மசாஜ் செய்யச் சொல்வது, செல்போன்கள், கஞ்சா போன்றவற்றை கடத்தி வரச்சொல்வது, கை–கால்களை கழுவி விடச்சொல்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால் இவற்றுக்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இது விரைவில் கட்டுப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்