கடூர் அருகே சிறுத்தை தாக்கி விவசாயி சாவு கூண்டுவைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

கடூர் அருகே சிறுத்தை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக செத்தார்.

Update: 2017-10-20 22:27 GMT

சிக்கமகளூரு,

இதைதொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் அந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவிற்கு உட்பட்ட போதிகெரே கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை போன்ற வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் இங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதனால் அங்குள்ள கிராம மக்கள் தினமும் அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த சோமப்பா(வயது 51) என்ற விவசாயி, அவரது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இந்த நிலையில் விவசாய நிலத்திற்கு சென்ற சோமப்பா வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தார் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர், சிறுத்தை தாக்கி செத்தது தெரியவந்தது. உடனே இதுபற்றி தரிகெரே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சோமப்பாவின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது சிறுத்தை தாக்கி பலியான சோமப்பாவின் குடும்பத்தினருக்கு, அரசிடம் இருந்து நஷ்டஈடு பெற்றுத் தரவேண்டும் என்றும், தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் அங்கிருந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் சிறுத்தை தாக்கி பலியான விவசாயியின் குடும்பத்திற்கு, அரசிடம் இருந்து நஷ்ட ஈடு வாங்கி தருவதாகவும், தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்