அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

Update: 2017-10-20 22:30 GMT
அந்தியூர்,

அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி கவிதா. 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுடைய மகள்கள் தர்ஷனி (வயது 7), ஜோஷிகா (1½). அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தர்ஷனி 2-ம் வகுப்பு படித்து வந்தாள். தர்ஷனிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 10-ந் தேதி அந்தியூர் அருகே தவுட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் அவளுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றாள். அப்போது அவளுடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தர்ஷனி நேற்று பரிதாபமாக இறந்தாள்.

அந்தியூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தியூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்