கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் விளக்கக்கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் ஊதிய மாற்றம் தொடர்பான விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-10-20 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் ஊதிய மாற்றம் தொடர்பான விளக்கக் கூட்டம் நடந்தது. இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் அம்சராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் சாமிநாதன், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் குமரேசன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் தமிழக அரசு, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அறிவித்த ஊதிய மாற்றத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர் உள்பட அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படாதது குறித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் குறித்தும் விளக்கி பேசப்பட்டது.

மேலும், இதில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜாக்டோ-ஜியோ மாநில அமைப்பு சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அதில் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசு ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்