கோவில்களில் திருடிய 2 பேர் கைது
ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தை ஒட்டி நாகவல்லி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவில் அர்ச்சகர் சுரேந்திரநாதகுமார் கோவிலை திறக்க சென்றார்.
ஊத்துக்கோட்டை,
கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த ½ பவுன் தாலி பொட்டு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதே போல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பொருட்களை திருடி சென்று விட்டனர்.
திருடர்களை பிடிக்க ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ரோந்து சென்ற போது 2 பேர் அவரை கண்டதும் அங்குள்ள முள்புதருக்குள் பதுங்கினர். சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் அவர்களை பிடித்து விசாரித்தார். அதில் ஒரு வாலிபர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கிரண்குமார் (வயது 35) மற்றும் பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தை சேர்ந்த தமிழரசன் என்பது தெரியவந்தது.
இவர்கள் நாகவல்லி அம்மன் கோவில், பென்னாலூர்பேட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவில் மற்றும் கடந்த மாதம் செங்கரை கிராமத்தில் காட்டு செல்லி அம்மன் கோவில்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் தாலி பொட்டு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.