கோலார்-பெங்களூரு இடையேயான சுவர்ணா ரெயில் ரத்து எதிர்ப்பு தெரிவித்து பயணிகள், ரெயில் மறியல் போராட்டம்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் மாரிக்குப்பத்தில் இருந்து தினமும் பெங்களூருவுக்கு சுவர்ணா பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

Update: 2017-10-19 23:30 GMT
கோலார் தங்கவயல்,

தினமும் காலை 6.20 மணிக்கு மாரிக்குப்பத்தில் இருந்து புறப்படும் இந்த சுவர்ணா பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்தை சென்றடையும்.

பின்னர் மாலை 6 மணிக்கு பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் இரவு 8.30 மணிக்கு மாரிக்குப்பத்தை வந்தடையும். 18 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் மூலம் தினமும் கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூருவுக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சுவர்ணா பயணிகள் ரெயிலை ரத்து செய்துவிட்டு 12 பெட்டிகள் கொண்ட மெமூ ரெயிலாக மாற்ற தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இதுகுறித்து அறிந்த முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.எச்.முனியப்பா பெங்களூருவுக்கு சென்று ரெயில்வே மண்டல மேலாளரை சந்தித்து, சுவர்ணா ரெயிலை மெமூ ரெயிலாக மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் சுவர்ணா ரெயிலையே வழக்கம்போல் இயக்க வேண்டும் என்றும், அதில் கூடுதலாக 2 பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் கோரி மனுவும் கொடுத்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனதா தளம்(எஸ்) கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினரும் ரெயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மேலும் மெமூ ரெயிலை இயக்க வேண்டாம் என்றும், சுவர்ணா ரெயிலையே வழக்கம்போல் இயக்க வேண்டும் என்றும் கோரி ரெயில் பயணிகள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து மாரிக்குப்பத்திற்கு திடீரென மெமூ ரெயில் இயக்கப்பட்டது. நேற்று காலை மாரிக்குப்பத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட மெமூ ரெயில் தயாராக இருந்தது. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மெமூ ரெயில் இயக்கப்பட்டதை அறிந்த காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் மாரிக்குப்பம் ரெயில் நிலையத்தில் காலை 6 மணிக்கே திரண்டனர்.

பின்னர் அவர்கள் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவியும், பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.முனியப்பாவின் மகளுமான ரூபா சசீதர் தலைமையில் தண்டவாளத்தில் அமர்ந்து பெங்களூருவுக்கு புறப்பட தயாராக இருந்த மெமூ ரெயிலை மறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ரெயில்வே ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் ரெயில் புறப்பட காலதாமதம் ஆனது. காலை 7 மணி வரைக்கும் போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தில் பயணிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த கோலார் தங்கவயல் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசமூர்த்தி தலைமையில், பங்காருபேட்டை ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், சுவர்ணா ரெயிலையே மீண்டும் வழக்கம்போல் இயக்க வேண்டும், மெமூ ரெயிலில் 12 பெட்டிகள்தான் உள்ளன. அதனால் அதை இயக்க வேண்டாம், இல்லையேல் மெமூ ரெயிலிலும் 18 பெட்டிகள் வரை இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் தங்களிடம் வந்து பேச வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ரெயில் மீது கல்வீசி தாக்கினர். இதில் 3 பெட்டிகளில் தலா ஒரு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. கல்வீச்சில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சிவசங்கர் என்பவரும் காயம் அடைந்தார்.

போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் பின்னர் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து மாரிக்குப்பத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7.20 மணிக்கு மெமூ ரெயில் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் மாரிக்குப்பத்தில் இருந்து சாம்பியன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது திடீரென ரெயில் நின்றது. இதையடுத்து என்ஜின் டிரைவரும், ரெயில்வே ஊழியர்களும் சென்று பார்த்தனர். அப்போது யாரோ ஒரு பயணி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியது தெரியவந்தது. ஆனால் அந்த பயணி யார் என்று தெரியவில்லை.

இதையடுத்து மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது. அப்போதும் யாரோ ஒரு பயணி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். இவ்வாறாக தொடர்ந்து 5 முறை ரெயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் அபாய சங்கிலியின் இணைப்பை துண்டித்தனர். அதையடுத்து ரெயில் பெங்களூரு நோக்கி இயக்கப்பட்டது.

பின்னர் அந்த ரெயில் காலதாமதமாக காலை 8 மணிக்கு உரிகம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கவயல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பக்தவச்சலம் ரெயில் மறியலில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதையடுத்து அந்த ரெயில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த திடீர் ரெயில் மறியல் போராட்டத்தால் மாரிக்குப்பத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாரிக்குப்பம் ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், பங்காருபேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் லால் தலைமையிலான போலீசார், மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவி ரூபா சசீதர், தங்கவயல் நகரசபை தலைவர் ரமேஷ் குமார் ஜெயின், முன்னாள் நகரசபை தலைவரும், தங்கவயல் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவருமான தாஸ் சின்னசவரி, முன்னாள் தங்கவயல் அபிவிருத்தி குழும தலைவர் ஜெயபால், முன்னாள் நகரசபை தலைவர் கே.சி.முரளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ஆனந்தன், காங்கிரஸ் நிர்வாகிகள் தாடி சுரேஷ், மதலை முத்து, அன்பு ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்