மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி சாவு மின் திருட்டில் ஈடுபட்டவர் கைது

பைங்கன்வாடியில் மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மீட்டரில் இருந்து மின் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2017-10-19 22:45 GMT

மும்பை,

மும்பை உள்ள குடிசை பகுதிகளில் மின்திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. மின்திருட்டால் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:–

மும்பை கோவண்டி பைங்கன்வாடி பகுதியை சேர்ந்தவர் சாகிர் குரேஷி(வயது40). கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சமீர்கான் என்பவர் சாகிர் குரேஷியின் வீட்டு மின் இணைப்பில் இருந்து யாருக்கும் தெரியாமல் வயரை இணைத்து மின் திருட்டில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது அவர் ஒரு வயரை சரியாக இணைக்காமல் சென்றுவிட்டார். அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

இது தெரியாமல் நேற்றுமுன்தினம் சாகிர் குரேஷி மின் இணைப்பு பெட்டியின் அருகில் சென்றுள்ளார். அப்போது, அங்கு தொங்கிக்கொண்டிருந்த ஒயர் சாகிர் குரேஷியின் உடலில் ஒரசியது. இதில், மின்சாரம் தாக்கி சாகிர் குரேஷி தூக்கிவீசப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சயான் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து வந்த சிவாஜிநகர் போலீசார் சாகிர் குரேஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான சமீர்கானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மின் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

மேலும் செய்திகள்