ஆட்டோ டிரைவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
மும்பை பவாயை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், சம்பவத்தன்று தனது ஆட்டோவிற்கு பெர்மிட் வாங்க அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
மும்பை,
அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அவரிடம் பவாய் போலீஸ் நிலையத்தில் சென்று நல்லொழுக்க சான்றிதழ் வாங்கி வருமாறு தெரிவித்தனர்.
இதன்பேரில் ஆட்டோ டிரைவர் பவாய் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த போலீஸ்காரர் சஞ்சய் போக்டேவிடம் இது குறித்து தெரிவித்தார். அப்போது, போலீஸ்காரர் சஞ்சய் போக்டே தனக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் தந்தால் சான்றிதழ் தருவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர், அவரிடம் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனையின்பேரில், சம்பவத்தன்று ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சஞ்சய் போக்டேவிடம் லஞ்சப்பணம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிய சஞ்சய் போக்டேவை, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.