3 பேர் கொலையில் மது குடிக்கும் இடத்தை காட்டிக்கொடுத்தது யார்? போலீசார் விசாரணை

3 ரவுடிகள் கொலையில் மது குடிக்கும் இடத்தை காட்டிக்கொடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-10-19 23:30 GMT
புதுவை,

புதுவை மேட்டுப்பாளையம் பகுதியில் மாமூல் வசூலிக்கும் தகராறில் ரவுடிகளான ஞானசேகர், சதீஷ், ஜெரால்டு ஆகியோர் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் பீரோ தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வைத்து ஒரு கும்பல் கொலை செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் அங்கு வைத்து மது குடிக்கிறார்கள் என்பதை ஞானசேகர், சதீஷ், ஜெரால்டு ஆகியோரின் கூட்டாளி ஒருவர்தான் மார்ட்டின் தரப்பினருக்கு தெரிவித்திருக்க வேண்டும் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு தகவல் தெரிவிக்காமல் எதிர்தரப்பினர் வந்து தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

இதனால் ஞானசேகரின் கூட்டாளிகள் குறித்த தகவலை சேகரித்துள்ள போலீசார் அவர்களது செல்போன் எண்களை வைத்து அவர்கள் யார் யாரிடம் பேசியுள்ளனர்? மேலும் அவர்களுடன் இருந்து மது குடித்தவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களது செல்போன் எண்களையும் கொண்டு அவர்கள் யார்யாருடன் பேசினார்கள்? என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் தமிழக பகுதிகளை சேர்ந்த சிலரும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்