திண்டுக்கல் அருகே குடிசை தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

திண்டுக்கல் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசமாகின.;

Update: 2017-10-19 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள என்.எஸ்.நகரை சேர்ந்தவர் கோபிஆனந்த். இவர் அங்குள்ள விநாயகர் கோவில் தெருவில் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குடிசையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கோபி ஆனந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவருடைய வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் குடிசை முழுவதும் தீ பரவியதால், சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.

எனினும், வீட்டில் இருந்த டி.வி., கட்டில், மெத்தை, பீரோ மற்றும் அதற்குள் இருந்த துணிகள், ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. குடிசை வீடு தீப்பிடித்ததில் பக்கத்து வீட்டு மாடியில் இருந்த குளிர்சாதன கருவி, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி ஆகியவையும் சேதமாகின.

அந்த பகுதியில் நேற்று காலை சிலர் பட்டாசு வெடித்ததாக தெரிகிறது. அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி கூரையில் விழுந்து வீடு தீப்பிடித்ததா? அல்லது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்