சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை

பழனி அருகே, சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளி ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-10-19 22:45 GMT
கீரனூர்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 49). இவருடைய மனைவி கலாவதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணேசனுக்கு கோரிக்கடவில் சொந்தமாக சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 17-ந்தேதி கணேசன் தனது குடும்பத்தினருடன் ஆலையிலேயே தங்கிவிட்டார்.

அடுத்த நாள் காலையில் கணேசன் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதையும், அதில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். உடனே உள்ளே சென்று அவர்கள் பார்த்த போது, பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதையடுத்து மோப்பநாய் ரூபா வரவழைக்கப்பட்டது. பீரோவை மோப்பம் பிடித்த நாய் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ, கதவில் பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கணேசனின் வீட்டில், நரிக்கல்பட்டியை சேர்ந்த பழைய குற்றவாளியான பேச்சிமுத்து என்ற தொழிலாளி திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்ற போது, கணேசனின் வீட்டில் திருடு போன பொருட்கள் மட்டும் அங்கு இருந்தது. ஆனால் வீட்டில் பேச்சிமுத்து இல்லை. அவர் தலைமறைவாக உள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் நகை, பணத்துடன் தலைமறைவான பேச்சிமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்