தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை போலீசார் விசாரணை

பவானியில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-10-19 23:00 GMT
பவானி,

பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா என்கிற கோவிந்தன் (வயது 37). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளார்கள். கோவிந்தனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் சரியாக வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

கோவிந்தன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென மனைவி, குழந்தைகளை விட்டு வெளியூருக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தீபாவளியையொட்டி அவர் ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்த அவர் அருகில் உள்ள ஆற்றுக்கு சென்று குளித்துவருவதாக கூறிவிட்டு புறப்பட்டார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் கோவிந்தன் நேற்று காலை பழனியாண்டவர் கோவில் பின்புறம் உள்ள ஒரு காலியிடத்தில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ (பவானி), சிவக்குமார் (சித்தோடு), ரவி (அந்தியூர்), சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

கோவிந்தனின் தலை, முகம் மற்றும் மார்பில் ரத்தம் உறைந்து காணப்பட்டது. தலையில் ஆழமாக காயம் பதிந்திருந்தது. அவரது அருகில் ஒரு கல் கிடந்தது. எனவே மர்மநபர்கள் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிந்தனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானியில் டீக்கடை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்