பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: புதுவை காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. எச்சரிக்கை சிவா எம்.எல்.ஏ. அறிக்கை
புதுவை பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. காங்கிரஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் தி.மு.க. எப்போதும் தனித்தன்மையுடன் செயல்படும். ஆளும் காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை மக்களின் நலனுக்காக எந்தவித தயக்கமுமின்றி உடனுக்குடன் தி.மு.க. சுட்டிக்காட்டி வருகிறது. சமீப காலமாக காங்கிரஸ் அரசு மக்கள்விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது.
வீட்டுவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, என பலவித வரியை மக்கள் மீது காங்கிரஸ் அரசு திணித்து வருகிறது. சட்டமன்றத்திலோ, அமைச்சரவையிலோ இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அறிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பினால் புதுவையில் பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரம் முழுமையாக முடங்கி உள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச சர்க்கரைகூட வழங்கப்படவில்லை. இலவச அரிசியையும் வழங்க முடியவில்லை.
இந்தநிலையில் பண்டிகை நாளை கசப்படைய செய்யும் வகையில் பஸ் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முதல்–அமைச்சரோ, அமைச்சரோ இந்த அறிவிப்பை வெளியிடாமல் போக்குவரத்துத்துறை அதிகாரியை வைத்து வெளியிட செய்துள்ளனர். இந்த கட்டண உயர்வு அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும்.
புதுச்சேரியில் மற்ற மாநிலங்களைவிட டீசல் விலை குறைவு. உதிரிபாகங்கள் விலையும் குறைவு. இருக்கை வரியும் குறைவு. இவ்வளவு சலுகைகள் உள்ள நிலையில் 100 சதவீத கட்டண உயர்வு தேவையற்றது. இந்த கட்டண உயர்வை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. புதுவையில் ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த குழு அமைக்கப்பட்டது. 3 முறை அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு பலவித அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதியில் யாருக்கும் பாதிப்பின்றி கட்டணம் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் பஸ் கட்டண உயர்வு குறித்தும் விவாதிக்கப்படவேண்டும். குறைந்தபட்சமாக 20 சதவீதம் கட்டணத்தை உயர்த்தினாலே போதும். எனவே பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இந்த பஸ் கட்டண உயர்வை உடனடியாக காங்கிரஸ் அரசு வாபஸ்பெற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நலனுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவும் தி.மு.க. தயங்காது என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சிவா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.