மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தம்பதி பலி மகளுக்கு தீபாவளி சீர்வரிசை கொடுத்துவிட்டு திரும்பிய போது பரிதாபம்

பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர்.

Update: 2017-10-18 23:30 GMT
விருத்தாசலம்,

மகளுக்கு தீபாவளி சீர்வரிசை பொருட்கள் கொடுத்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்டம் முல்லையூரை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 44), விவசாயி. இவருடைய மனைவி சுமதி (39). இவர்களது மகள் விஜி(23). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, வீரமுத்து தனது மகளுக்கு பலகாரங்கள், பட்டாசு, புத்தாடைகள் போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்க முடிவு செய்திருந்தார்.

அதன்படி, சம்பவத்தன்று வீரமுத்து தனது மனைவி சுமதியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மகள் வீட்டிற்கு வந்தார். அங்கு மகள், மருமகனுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு சீர்வரிசையை கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் முல்லையூர் நோக்கி அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

பெண்ணாடம் வெண்கரும்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த கார் வீரமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளுக்கு தீபாவளி சீர்வரிசை பொருட்கள் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய போது கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்