நீடாமங்கலம் அருகே கார் குட்டையில் பாய்ந்து ஒருவர் சாவு மற்றொரு விபத்தில் லாரி டிரைவர் சாவு

நீடாமங்கலம் அருகே கார் குட்டையில் பாய்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொரு விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி டிரைவர் பஸ் மோதி உயிரிழந்தார்.

Update: 2017-10-18 23:15 GMT
நீடாமங்கலம்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்தவர் அன்வர்பாட்ஷா(வயது55). இவர் தனது உறவினர்கள் 4 பேருடன் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் மன்னார்குடி சென்றுவிட்டு கும்பகோணத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் நீடாமங்கலம் மன்னார்குடி சாலையில் தட்டி தெரு என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் உள்ள குட்டையில் தலைகுப்புற பாய்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்து வெளியே வரமுடியாமல் அலறினர்.

இது குறித்து தகவலறிந்ததும் நீடாமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் சிக்கிய 5 பேரையும் வெளியே மீட்டனர். இதில், அன்வர்பாட்ஷா மட்டும் பலியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் படுகாயம் அடைந்த 4 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அன்வர் பாட்ஷாவின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்(23) லாரி டிரைவர். தீபாவளியையொட்டி இவர், நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் மன்னார்குடி சென்று புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு நீடாமங்கலம் மன்னார்குடி சாலையில் ராஜப்பையன்சாவடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வெற்றிச்செல்வன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்