தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கிரண்பெடி–தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கவர்னர் கிரண்பெடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2017-10-17 22:43 GMT

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

தீபத்திருநாளாம் தீபாவளி இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. தர்மத்தின் வெற்றியை குறிக்கும் வகையில் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த தீபாவளி திருநாள் அனைவரது வாழ்விலும் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், கொண்டுவரவேண்டும். இந்த நன்னாளில் புதுவை மக்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

மூத்தோரின் வழியில் ஆண்டாண்டு காலமாய் கொண்டாடும் திருவிழா தீபாவளி. நல்ல எண்ணங்கள் என்ற தீபத்தை ஏற்றி, இருள் என்ற தீமையை அழிப்பதே தீபாவளியாகும். மக்களுக்கு துன்பம் விளைவித்த நரகாசூரனை திருமால் அழித்தார். அதுபோன்று நமக்கு துன்பம் விளைவிக்கின்ற, மனதில் இருக்கின்ற அறியாமை, இயலாமை, பொறாமை, சூழ்ச்சி, சினம் என்னும் நரகாசூரனை நாம் அகற்றிடவும், நம் வாழ்வில் இருள் அகன்று இன்பங்கள் பெருகி துன்பங்கள் எல்லாம் கரைந்துபோக ஒளிமயமான எதிர்காலம் பிறக்க நாம் நினைத்ததை எல்லாம் சாதிக்கவும், ஒவ்வொரு குடும்பத்தாரும் இத்திருநாளில் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இவ்வாறு கோகுலகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

இந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகிட அனைவரது இல்லங்களிலும் தீமை என்னும் இருள் அகற்றி நன்மை என்னும் ஒளி தீபத்தை ஏற்றுவோம். மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து சமத்துவம், சகோதரத்துவம் போற்ற இன்னாளில் சபதமேற்போம். நம் இன்னல்கள் அகல, நம் எதிர்கால புதுச்சேரி வளமாக இந்த நன்னாளை நம்பிக்கை தீபாவளியாக இனிதே கொண்டாடி மகிழ்வோம்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார்.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

தீபாவளி திருநாள் என்பது அதர்மத்தை ஒழித்து நீதியை நிலைநாட்டிய நாளாகும். இந்நன்னாளில் மக்களிடையே சாதி, மத பேதங்களை மறந்து அறியாமையையும், வேற்றுமையையும் களைந்து நாம் அனைவரும் சகோதர பாசத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

தீபாவளி என்பது எங்கும் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்ஞான இருளை நீக்கி மெய்ஞானம் பெறவேண்டும் என்பதுதான். ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டங்களையும், தற்போது அறிவித்த அறிவிப்புகளையும் செயல்படுத்தாத நிலையிலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க புதுவை அரசு தவறிய போதிலும், வறுமையிலும் இத்திருநாளை கொண்டாடும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் விடுத்துள்ள செய்தியில், தீபத்திருநாளில் புதுச்சேரி மக்கள் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவன் அருள் புரியட்டும், இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுவை மக்களை திணற வைக்கும் ஊழல் என்ற இருளும், திறமையில்லா ஆட்சி என்ற இருளும் விலகி, மகிழ்ச்சி, மலர்ச்சி, வளர்ச்சி ஆகிய ஒளிகள் பட்டொளி வீசட்டும். அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி திட்டம் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்கியதோடு நாம் நாட்டில் எல்லைதாண்டிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து மக்களின் வாழ்வில் சூழ்ந்திருந்த இருளை நீக்கி புதிய ஒளியை பரவ செய்து கொண்டிருக்கும் நமது பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் ஏழை மக்கள் அனைவரும் இந்த தீபாவளியை பெருமகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்