ஊதிய உயர்வு பிரச்சினை போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் மராட்டியத்தில் பஸ்கள் ஓடவில்லை

மராட்டிய அரசு போக்குவரத்து கழகம் நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகமாக திகழ்கிறது.

Update: 2017-10-17 23:45 GMT
மும்பை,

மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு பஸ் சேவையை தினசரி 60 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் மாநில அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து போராட்டத்தில் குதிக்க போவதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மாநில போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன.

மும்பையில் பரேல், மும்பை சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநிலத்தின் மற்ற இடங்களுக்கு செல்லும் பஸ்கள், மும்பை- புனே இடையே இயக்கப்படும் சிவ்னெரி பஸ்கள் டெப்போக்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
நேற்று காலை அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன் போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மராட்டியத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை நேற்று தொடங்கியது. தீபாவளியை சொந்த ஊரில் சென்று கொண்டாடுவதற்காக ஏராளமானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் பஸ் நிலையங்களில் திரண்டனர்.

கடைசி நேரத்தில் பஸ்கள் ஓடாதது தெரியவந்ததால் எப்படி ஊருக்கு செல்வது என்பது தெரியாமல் திண்டாடினார்கள். இரவு பொழுதை பஸ் நிலையங்களிலேயே கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்தவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

குறிப்பாக, மும்பையில் இருந்து புனே, நாக்பூர், ரத்னகிரி, சோலாப்பூர், கோலாப்பூர் மற்றும் அகோலா ஆகிய நீண்ட தூர ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள், பஸ் கிடைக்காமல் பரிதவித்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் மாநில போக்குவரத்து கழகம் கடந்த 15-ந் தேதி முதல் தற்காலிகமாக பஸ் கட்டணத்தை 10 சதவீதம் வரையிலும் அதிகரித்து இருந்தது. ஆனால் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில், பொதுமக்களின் நலன் கருதி மராட்டிய அரசு தனியார் பஸ்கள், லாரிகள், பள்ளிக்கூட பஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்களை வெளியூர்களுக்கு இயக்கி கொள்ள அனுமதி அளித்தது. இதன் காரணமாக தனியார் வாகனங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
போராட்டம் குறித்து, போக்குவரத்து தொழிற்சங்க (எம்.எஸ்.எஸ்.கே.எஸ்.) தலைவர் சந்தீப் ஷிண்டே கூறியதாவது:-

போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை ஊதியம் வெறும் ரூ.7 ஆயிரம் தான். மாநில அரசு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்குகிறது. இதன் காரணமாக 700 ரூபாய் வரை தான் சம்பள உயர்வு கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்.

நாங்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதுவரை தற்காலிகமாக 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறோம். எனினும், இந்த இடைக்கால ஊதிய உயர்வில் பாதியை தான் வழங்க முடியும் என்று அரசு விடாப்பிடியாக இருக்கிறது.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால், இந்த நிமிடம் கூட வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட தயார். எங்களது போராட்டத்தால், பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக வருந்துகிறோம். அதற்காக தொழிற்சங்கம் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்காக நீண்ட நாட்களாக நாங்கள் சேவைபுரிந்து வருகிறோம். இந்த தடவை எங்களது வாழ்வாதாரத்துக்காக அவர்களது ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இந்த பிரச்சினையை தீர்க்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தேயும் சில முடிவுகளை எடுத்து இருக்கின்றனர். ஆனாலும், எங்களுக்கு தேவையானது இறுதி தீர்வு மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, இதுபோன்ற போராட்டங்கள் சட்டத்துக்கு உட்பட்டது இல்லை என்றும், உடனடியாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் போக்குவரத்து துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே கூறுகையில், “போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் சட்டவிரோதமானது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி அவர்களுக்கு சம்பளம் வழங்குவது சாத்தியமில்லாதது. இதுபற்றி முதல்-மந்திரி ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்” என்றார்.

தவிர, தீபாவளி சமயத்தில் பொதுமக்களின் துயரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்