தீபாவளியை முன்னிட்டு சென்னை ரேஷன் கடைகளில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2017-10-17 22:45 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கோபாலபுரம் அமுதம் ரேஷன் கடைகள் மற்றும் அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடி ஆகியவற்றில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ரா.காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் ஆகியவை ரேஷன் கடைகளில் போதுமான அளவு இருப்பு உள்ளதா? என்றும், அவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு சீரான முறையில் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதையும் அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்து உறுதி செய்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரிசி 98 சதவீதம், சர்க்கரை 98 சதவீதம், கோதுமை 97 சதவீதம், பருப்பு 96 சதவீதம், பாமாயில் 96 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விற்பனையாகி வருகிறது.

மேலும், கிடங்குகளில் அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. அரிசி ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 262 மெட்ரிக் டன்னும், சர்க்கரை 40 ஆயிரத்து 63 மெ.டன்னும், கோதுமை 9 ஆயிரத்து 989 மெ.டன்னும், பருப்பு 11 ஆயிரத்து 85 மெ.டன்னும், பாமாயில் 35 லட்சத்து 60 ஆயிரத்து 817 பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. ரேஷன் கடைகள் ஆய்வின்போது, அமைச்சரிடம், ரேஷன் கடைகள் மூலம் தரமான பொருட்கள் சரியான எடையுடன் சீரான முறையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் எம்.சுதாதேவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் எஸ்.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்