தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கால்வாய்கள் தூர்வாராததால் விவசாயிகள் ஏமாற்றம்

தென் பெண்ணை ஆற்றில் இருந்து பாகூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால்

Update: 2017-10-16 23:08 GMT

பாகூர்,

ஆற்றில் செல்லும் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் ஏரிகள் நிரம்பாததால் பாகூர் பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும் தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளமாக கரைபுரண்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறு அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

இதில் கடைசியாக உள்ள சாத்தனூர் அணையும் நிரம்பி அங்கிருந்து உபரி தண்ணீர் வெளியேறி வருகிறது. அதன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சொர்ணாவூர் அணைக்கட்டு, சித்தேரி அணை மற்றும் கொமந்தான்மேடு தடுப்பணை ஆகியவை நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

ந்த 3 அணைகளும் புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் சொர்ணாவூர், அணைக்கட்டில் இருந்து வாய்க்கால்கள் மூலம் பாகூரில் உள்ள பாகூர் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள் உள்பட 24 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். அதேபோல் சித்தேரி அணைக்கட்டில் இருந்து கால்வாய் மூலமாக சித்தேரி, பரிக்கல்பட்டு ஏரி, சோரியாங்குப்பம் ஏரி உள்பட பல ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

தென் பெண்ணை ஆற்றில் தற்போது வரும் தண்ணீர் தொடர்ந்து இதேபோல் எத்தனை நாட்களுக்கு வரும் என்று உறுதியாக சொல்லமுடியாத நிலை உள்ளது. மழை பெய்வது நின்றுவிட்டால் தண்ணீர் வரத்து குறையவும், சில நாட்களில் தண்ணீர் வரத்து நின்றுவிடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அடைப்புகள் ஏற்பட்டு தென் பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதற்கிடையே கொமந்தான்மேடு தடுப்பணை ஏற்கனவே வந்த வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. அதன் காரணமாக அப்போது தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் வீணாக கடலில் சென்று கலந்தது. தற்போது வரை அந்த சேதம் சரிசெய்யப்படவில்லை. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் தண்ணீர் வரும் வேகத்தில் இந்த தடுப்பணை மேலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுபற்றி தகவல் அறிந்தவுடன் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, பாகூர் உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து பார்வையிட்டனர். தொடர்ந்து தடுப்பணை உடையாமல் தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கொட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் மணல் மூட்டைகளும் போடப்பட்டு வருகிறது.

அதற்காக கொமந்தான்மேடு தடுப்பணை தமிழக பகுதியையொட்டியுள்ள சுடுகாட்டுக்கு அருகில் இருந்து புதுச்சேரி ஊழியர்கள் மணல் எடுத்தனர். அதை அறிந்ததும் அந்த பகுதி கிராம மக்கள் வந்து அங்கு மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அதுகுறித்து கடலூர் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த கடலூர் மாவட்ட அதிகாரிகள் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து மாற்று நடவடிக்கையாக புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் வெளியிடங்களில் இருந்து லாரிகள் மண் கொண்டு வரப்பட்டு தடுப்பணையில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொமந்தான்மேடு தடுப்பணை, சித்தேரி அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு, பங்காரு வாய்க்கால் மற்றும் வரத்து வாய்க்கால்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பங்காரு வாய்க்காலில் கரையாம்புத்தூர் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு வாய்க்கால் உடைப்பு காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுபற்றி தகவல் அறிந்ததும் கரையாம்புத்தூர் மற்றும் பாகூர் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு பாகூர் ஏரிக்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்