பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 2 மாடி கட்டிடம் இடிந்து 7 பேர் பலி குழந்தை உயிருடன் மீட்பு

பெங்களூரு விவேக் நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஈஜிபுரா, குண்டப்பா ரோடு 7-வது கிராசில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடிகளை கொண்ட கட்டிடம் இருந்தது.

Update: 2017-10-16 23:45 GMT
பெங்களூரு,

அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்த 6 வீடுகளை கணேஷ் வாடகைக்கு விட்டு இருந்தார். அந்த வீட்டின் தரைதளத்தில் வசித்தவர் சரவணா(வயது 30). இவரது மனைவி அஸ்வினி (25). இவர் களுக்கு 3 வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அஸ்வினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதுபோல, மற்ற வீடுகளில் 5 குடும்பத்தினர் வசித்து வந்தார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை 6.45 மணியளவில் அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பலத்த வெடி சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் 2 மாடி கட்டிடம் மளமளவென இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி அங்கிருந்த வீடுகளில் வசித்தவர்கள் உயிருக்கு போராடினார்கள். கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டிடம் இடிந்து விழுந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள். பின்னர் இதுபற்றி அவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தார்கள்.

சம்பவ இடத்திற்கு விவேக்நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உடனே விரைந்து வந்தார்கள். பின்னர் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் அங்கிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க தீயணைப்பு படைவீரர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். முதலில் ஒரு மூதாட்டி மற்றொரு வாலிபரின் உடல்களை இடிபாடுகளுக்குள் இருந்து தீயணைப்பு படைவீரர்கள் மீட்டார்கள்.

மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்கள். மேலும் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. பின்னர் 6 மணிநேர போராட்டத்திற்கு பின்பு இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதோடு ஒரு பெண் குழந்தை உள்பட 7 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார்கள். உடனடியாக அவர்கள் 7 பேரும் பவுரிங் மற்றும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் சரவணா, அவரது கர்ப்பிணி மனைவி அஸ்வினி, கலாவதி(65), ரவிச்சந்திரா(45), பவன் கல்யாண், ஹரிபிரசாத், மாலத்திரி என்று உடல் அடையாளம் காணப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சரவணாவின் குழந்தையான சஞ்சனா, சித்ரா(42), பிரியா(12), ஜானகி(3), அசோக்(5), திலீப்(18), ஆஷா(21) என்று தெரிய வந்தது. இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததா? அல்லது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இடிந்து விழுந்த கிடந்த கட்டிடத்தில் கிடந்த பொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழுந்ததில் பலியான சரவணா-அஸ்வினி ஆகியோரின் 3 வயது பெண் குழந்தையான சஞ்சனா இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டதை தொடர்ந்து இடிபாடுகளை மிகவும் கவனமாக அகற்றி ஏறத்தாழ 4 மணி நேர போராட்டத்துக்கு பின் குழந்தை சஞ்சனாவை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டார்கள். குழந்தையை மீட்டு தீயணைப்பு படை வீரர் ஒருவர் வெளியே கொண்டு வந்ததும் அங்கு மீட்பு பணியை பார்க்க கூடி இருந்த ஏராளமானோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்பு படையினரையும் பாராட்டினர்.

குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருந்தன. உடனடியாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 வயது குழந்தை சஞ்சனா உயிருடன் மீட்கப்பட்டாலும், தந்தையையும், தாயையும் இழந்து அனாதையாகிவிட்டதே என்று அக்கம் பக்கத்தினர் கண்ணீர் மல்க கூறினர்.

கட்டிடம் இடிந்துவிழுந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா நிருபர்களிடம் கூறியதாவது:-

“பெங்களூரு ஈஜிபுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் ஒரு தம்பதி உள்பட 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் இடிபாடுகளுக்குள் இருந்து 7 பேரை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டுள்ளனர். அவர்கள் படுகாயத்துடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் வீடு இடிந்து விழுந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, முதற்கட்ட விசாரணையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து, அதனால் வீடு இடிந்திருப்பது தெரியவந்துள்ளது.

என்றாலும், கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் 2 மாடி வீடு இடிந்து விழுவதற்கான வாய்ப்பில்லை என்ற சந்தேகம் எழுந்திருப்பதால், அது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையின் முடிவில் தான் வீடு இடிந்ததற்கான சரியான காரணம் தெரியவரும். மேலும் படுகாயம் அடைந்தவர்களில் சிலர் சுயநினைவின்றி உள்ளனர். அவர்களுக்கு சுயநினைவு திரும்பியதும் விசாரித்து தகவல்கள் பெறப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி, பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் விரைந்து வந்தார்கள். பின்னர் இடிந்து விழுந்து கிடந்த கட்டிடத்தை அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மந்திரிகள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ் ஆறுதல் கூறினார்கள். இந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் அறிவித்து உள்ளார்.

இதற்கிடையில், கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் வீடு இடிந்து விழுந்து 7 பேர் பலியாகி இருப்பதாக போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். நேற்று காலையில் இருந்து மாலை வரை இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. பின்னர் இடிபாடுகளுக்குள் யாரும் இல்லை என்பது தெரியவந்ததும், அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விவேக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்து 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு ஈஜிபுராவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த சரவணா, அவரது மனைவி அஸ்வினி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் இழந்தார்கள். அஸ்வினி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், சரவணாவின் 3 வயது பெண் குழந்தையான சஞ்சனா இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியது. அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு, அங்கிருந்த இடிபாடுகளுக்குள் இருந்து சஞ்சனாவை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டார்கள். குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருந்தன. உடனடியாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 வயது குழந்தை சஞ்சனா உயிருடன் மீட்கப்பட்டாலும், தந்தையையும், தாயையும் இழந்து அனாதையாகிவிட்டதே என்று அக்கம் பக்கத்தினர் கண்ணீர் மல்க கூறினர்.

மேலும் செய்திகள்