கர்நாடகத்தில் மழைக்கு மேலும் 7 பேர் பலி

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

Update: 2017-10-16 23:00 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் மழைக்கு சுமார் 20–க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14–ந் தேதி பெய்த மழைக்கு மட்டும் ஒரேநாளில் 6 பேர் பலியாகினர். பெங்களூருவில் மட்டும் 10 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கதக் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அந்த மாவட்டத்தில் உள்ள கஜேந்திரகட் என்ற இடத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேகபூபி(வயது56), முஸ்கான்(6), நாஜியா(10) ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

பீதர் மாவட்டம் பசவ கல்யாண் தாலுகா லாடவந்தி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தபோது அங்குள்ள குளத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த பாபுராவ், கேசவ், இந்தரஜித் ஆகுய 3 பேர் தவறி விழுந்து மரணம் அடைந்தனர். விவசாய வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பும்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

அதே போல் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா செங்கடி கிராமத்தில் சரணப்பா(48) என்பவர் மின்னல் தாக்கி பலியானார். ஆகமொத்தத்தில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு 7 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20–ஐ தாண்டியுள்ளது.

இதேபோல் நேற்று ராய்ச்சூர் மற்றும் தார்வாரிலும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்