எம்.எல்.ஏ.க்களுக்கு தங்க நாணயம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை பரமேஸ்வர் பேட்டி
விதான சவுதா வைர விழாவில் நினைவு பரிசாக எம்.எல்.ஏ.க்களுக்கு தங்க நாணயம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி செயற்குழு கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் பிரதாபன், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்பட அந்த அணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நவம்பர் 21–ந் தேதி மீனவர் தினத்தன்று மீனவர்கள் மாநாடு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் எங்கள் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்வார். அகில இந்திய காங்கிரசில் மீனவர் அணி உள்ளது. அதேபோல் கர்நாடக காங்கிரசிலும் அந்த அணி தொடங்கப்பட்டுள்ளது.
விதான சவுதா கட்டிட வைர விழாவை கொண்டாடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நினைவு பரிசாக எம்.எல்.ஏ.க்களுக்கு தங்க நாணயமும், ஊழியர்களுக்கு வெள்ளி தட்டும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களின் தலைவர்களை மாற்றுமாறு கோரிக்கை இருந்தது. அதன் அடிப்படையில் சில மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளோம்.
வேட்பாளர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. தேர்தலை சந்திக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி அவர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். சி.பி.யோகேஷ்வர் எம்.எல்.ஏ. உள்பட சிலர் எங்கள் கட்சியை விட்டு விலகுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் விலகி சென்றுவிட்டனர். அவர்களை பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. பா.ஜனதாவில் இருந்து விலகி 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர தயாராக உள்ளனர்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.