ரூ.6 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் மினி வேனுடன் பறிமுதல் 2 பேர் கைது

வாணியம்பாடி அருகே ரூ.6 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் மினிவேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-10-16 23:00 GMT
வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வேப்பமரச்சாலை என்ற இடத்தில் உள்ள போதகுண்டு மலை அடிவாரத்தில் எரிசாராயம் பதுக்கியும், பாக்கெட்டுகளாக தயாரித்தும் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்காக சப்ளை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மினிவேனில் எரிசாராய கேன்களை கொண்டு வந்து 5 பேர் மலையடிவாரத்தில் இறக்கி கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த மணி மகன் தமிழன் (வயது 26), இக்பால் மகன் அஹமத்பாஷா (55) ஆகியோர் போலீசில் பிடிபட்டனர்.

மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மேலும் அங்கு 34 கேன்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 1, 700 லிட்டர் எரிசாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்