மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அணை கட்ட கொடுத்த நிலத்துக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

கொத்தயம் அணை கட்டுவதற்கு கொடுத்த நிலத்துக்கு இழப்பீடு கேட்டு, மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2017-10-16 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண்சத்யா உள்பட அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள போடுவார்பட்டி விவசாயிகள் இழப்பீடு கேட்டு மனு கொடுத்தனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கொத்தயம் மற்றும் போடுவார்பட்டி கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவை பாசனம் பெறும் வகையில் கொத்தயத்தில் அணை கட்டுவதற்கு விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்தது. 2 கிராமங்களிலும் சுமார் 150 ஏக்கர் வரை நிலத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் கையகப்படுத்தினர். இதில் போடுவார்பட்டியை சேர்ந்த 16 விவசாயிகளுக்கு 48 ஏக்கர் நிலத்துக்கான இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

விவசாய நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம், தென்னை மரத்துக்கு ரூ.1,200 தருவதாக கூறினர். 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் நிலத்தையும் இழந்து வருமானத்துக்கு வழியில்லாமல் தவித்து வருகிறோம். மேலும் அணை கட்டும் பணியும் மிகவும் மந்தமாக நடக்கிறது. எனவே, 16 விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கி, அணை கட்டும் பணியை வேகப்படுத்த வேண்டும், என்றனர்.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில், கணக்கன்பட்டியில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி கடந்த 11.5.2017 அன்று முற்றுகை போராட்டம் நடத்தினோம். இதையடுத்து வேறு இடத்துக்கு மாற்றுவதாக கூறி, அந்த மதுக்கடையை அதிகாரிகள் மூடினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கடையை மீண்டும் திறந்து விட்டனர்.

இந்த மதுக்கடை, மயானப்பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. எனவே, ஏற்கனவே உறுதிஅளித்தபடி மதுக்கடையை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பழனி தாலுகா தும்பலப்பட்டி கிராமத்தில் நிலம் இல்லாத ஏழை விவசாயிகள் பலர் உள்ளனர். எனவே, அங்குள்ள தரிசு நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கனகு என்பவர் மனு கொடுத்தார். மேலும் திருநங்கைகள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் முறையிட்டனர்.

பாச்சலூர் அருகேயுள்ள சொடலப்பாறை கிராமத்தை சேர்ந்த காளியப்பன் கொடுத்த புகாரில், ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் காபி, மிளகு, வாழை பயிரிட்டுள்ளேன். இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய சிலர் முயற்சி செய்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்