பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த பஸ் மீது கல்வீச்சு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.;

Update: 2017-10-16 23:00 GMT
பொள்ளாச்சி,

பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதேபோன்று கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ்கள் இயங்கப்படவில்லை. பொள்ளாச்சியில் இருந்து சென்ற பஸ்கள் தமிழக எல்லையான கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தராபுரம், நடுப்புணி வரை இயக்கப்பட்டன.

பொள்ளாச்சியில் இருந்து சென்ற பொதுமக்கள் தமிழக எல்லையில் இறங்கி, அங்கிருந்து நடந்து சென்றனர். தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டதால் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்கள் ஓடாததால் அவதிப்பட்டனர். இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பொள்ளாச்சி புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று காலை 7.45 மணிக்கு கேரள அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பாலக்காடு அருகே நோம்பிக்கோடு என்ற இடத்தில் காலை 8.15 மணிக்கு வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.முன் பக்க கண்ணாடியும் லேசான சேதமடைந்தது.

பஸ்சில் சுமார் 20 பயணிகள் வரை இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. பஸ்சில் பயணிகள் இருந்ததால் கேரள போலீசார் தமிழக எல்லை வரை பாதுகாப்புக்கு வந்தனர். பின்னர் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, கேரள பஸ் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பொள்ளாச்சியில் இருந்து காய்கறிகள், பூக்கள், கறிக்கோழி மற்றும் பல்வேறு பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றதால், லாரிகள் இயக்கப்படவில்லை. சரக்குகளுடன் வந்த லாரிகள் தமிழக-கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக காய்கறிகள், பூக்கள் தேக்கம் அடைந்தன. இதனால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்பட்டன என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்