கணவர் இறந்த அதிர்ச்சியில் குழந்தையை கொன்று, தாய் தூக்குப்போட்டு தற்கொலை

கணவர் இறந்த அதிர்ச்சியில் காட்பாடியில் இளம்பெண் ஒருவர் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-16 23:15 GMT
வேலூர்,

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரெக்ஸ் (வயது 30). எம்.ஏ. பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ரூத்கிறிஸ்டியானா (28) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன் பால் (15 மாதம்).

பெங்களூருவில் வேலைபார்த்து வந்த ரெக்ஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி ரூத் கிறிஸ்டியானா காட்பாடியை அடுத்த செங்குட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ரூத்கிறிஸ்டியானாவின் பெற்றோர் தெள்ளூர் கிராமத்தில் உள்ள தனது மூத்தமகள் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளனர்.

அதேநேரத்தில் ரெக்சும் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் எங்கு செல்கிறார் என்று வீட்டில் சொல்லாமல் சென்றிருக்கிறார். இரவிலும் வீட்டுக்கு வரவில்லை. அவரை போனில் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்துள்ளது. இது பற்றி ரூத் கிறிஸ்டியானா தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அவர்களும் ரெக்சை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அடுத்தநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ரூத்கிறிஸ்டியானா, தனது கணவர் ரெக்ஸ் எண்ணிற்கு போன் செய்தார். அப்போது மறுமுனையில் போலீஸ்காரர் ஒருவர் பேசினார். அவர் மதுரையில் இருந்து பேசுவதாகவும், இந்த போன் வைத்திருந்த நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தற்கொலை செய்து கொண்ட நபரின் நெற்றியில் நரசிம்மா என எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனால் தற்கொலை செய்து கொண்டது தனது கணவர் ரெக்ஸ்தான் என்பதை ரூத்கிறிஸ்டியானா உறுதி செய்தார். இந்த தகவல் அவருடைய பெற்றோருக்கும் தெரிய வந்தது. உடனே அவர்கள் தெள்ளூரில் இருந்து செங்குட்டைக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு திரும்பினர். அப்போது ரூத் கிறிஸ்டியானா, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். குழந்தை பால் படுக்கையில் பிணமாக கிடந்தான்.

கணவர் இறந்த தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியடைந்த ரூத்கிறிஸ்டியானா குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி காட்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரெக்ஸ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அங்குள்ள போலீசாரிடம், காட்பாடி போலீசார் விசாரித்தனர். அப்போது ரெக்ஸ் மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் ஊருக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செங்குட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்