கிரானைட் கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 சிறுவர்கள் பலி பெண்ணின் கால்கள் முறிந்தது

பர்கூர் அருகே கிரானைட் கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் உறவுக்கார பெண்ணின் கால்கள் முறிந்தது.

Update: 2017-10-16 23:00 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பக்கமுள்ள நக்கல்பட்டியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 55). இவரது மகள் சங்கீதா, மருமகன் ராஜா (38), இவரது மகன் ஹரிஸ் (12). இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகிறார்கள். ஹரிஸ் அங்குள்ள பள்ளியில் 6-ம் படித்து வந்தான். தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் ஹரிஸ் பாட்டி முருகம்மாள் வீட்டுக்கு வந்தான்.

இந்த நிலையில் நேற்று காலை முருகம்மாளின் மகன் முருகேசன் (35), அவரது மகன் கவியரசு (6), ஹரிஸ் மற்றும் உறவினரான சந்திரா (50) ஆகியோர் வீட்டுக்கு வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து 2 ராட்சத கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி முருகம்மாள் வீட்டு வழியாக அந்த பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியை எலுமிச்சங்கிரியைச் சேர்ந்த டிரைவர் நரசிம்மன் (35) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த நேரம் ஒகேனக்கல் கூட்டு குடிநீருக்கு புதைக்கப்பட்ட குழாய் பள்ளத்தில் லாரி இறங்கி சாலையோரம் இருந்த வீட்டின் மேல் விழுந்தது. இதில் லாரியில் இருந்த ஒரு கிரானைட் கல் சரிந்து விழுந்ததில் திண்ணையில் அமர்ந்திருந்த சிறுவர்கள் ஹரிஸ் மற்றும் கவியரசு ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சந்திராவுக்கு 2 கால்களும் நசுங்கி முறிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ராட்சத கிரானைட் கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்தி சந்திராவை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி கலெக்டர் அருண், தாசில்தார் தணிகாசலம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

அதே போல கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவர் நரசிம்மனை கைது செய்தனர். போதிய வழித்தடம் இல்லாமல் கிரானைட் நிறுவனத்தை நடத்தி வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிரானைட் கல் விழுந்து 2 சிறுவர்கள் பலியான சம்பவம் நக்கல்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்