செல்லமாக வளர்த்த நாய் இறந்த சோகத்தில் பள்ளி மாணவி தற்கொலை
வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் இறந்த சோகத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, சக்தி அவென்யூ அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். இவருடைய மகள் அக்ஷயா(வயது 13). இவர், பூந்தமல்லியை அடுத்த செட்டிபேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.
அக்ஷயா, தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முடியை அகற்றுவதற்கான கிரீம் ஒன்றை ஆன்–லைன் மூலம் அவரது வீட்டில் வாங்கி இருந்தனர்.
அக்ஷயா, அந்த கிரீமை தனது மடியில் வைத்துக்கொண்டு தனது செல்ல நாயிடம் விளையாடிக்கொண்டு இருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த கிரீமை நாய் தின்று விட்டது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்ட அந்த நாய், நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து விட்டது.
தான் செல்லமாக வளர்த்து வந்த நாய் திடீரென இறந்து போனதை மாணவி அக்ஷயாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சாப்பிடாமல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறினர்.
நேற்று முன்தினம் இரவு அக்ஷயா, வீட்டில் உள்ள தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தங்கள் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அக்ஷயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாங்காடு போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தான் செல்லமாக வளர்த்த நாய் இறந்த சோகத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.