டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-16 21:00 GMT
நெல்லை,

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில், ஏராளமான பெண்கள், தங்களுக்கு அங்கன்வாடி பணியாளர் பணி, சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணி கேட்டு மனு கொடுத்தனர்.

கடையம் அருகே உள்ள தீர்த்தாரபுரம் கிராம மக்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடையம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, இளைஞர் அணி செயலாளர் குணா ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து தங்கள் ஊர் அருகில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கடையம் அருகே உள்ள தீர்த்தாரபுரத்திற்கும், நாலாங்கட்டளைக்கும் இடையில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பீடிக்கடைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி உள்ளனர்.

கொசு தொல்லை அதிகம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கிளை செயலாளர்கள் கிருஷ்ணன், இசக்கிமுத்து ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை டவுன் தடிவீரன்கோவில் அருகில் 44–வது வார்டில் குப்பைகளை கொட்டி வைத்து உள்ளனர். இதனால் அங்கு கொசு தொல்லை அதிகமாக உள்ளது இதை உடனே அகற்றவேண்டும். டெங்கு கொசுவை ஒழிக்கவும், டெங்கு காய்ச்சலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், கருங்குளம் பகுதி செயலாளர் ஜோசப் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

தலித்பெண்கள் எழுச்சி இயக்கத்தினர் மாவட்ட தலைவி வேலம்மாள் தலைமையில் கொடுத்த மனுவில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் உயர் கல்வி கற்க வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை அரசு குறைத்து உள்ளது. இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குறைத்த தொகையை மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அரைநிர்வாணமாக....


பாளையங்கோட்டை பொதிகைநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசன் (வயது 50). இவர் வசித்து வரும் வீட்டை, இவருடைய தாய் விற்று விட்டதாக தெரிகிறது. இதில் முருகேசன் பங்கு கேட்டு வந்தாராம். மேலும் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 9–ந் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு மனைவி, மகளுடன் மனு கொடுக்க வந்த முருகேசன், திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்களாம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று முருகேசன், அரைநிர்வாணமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எனது வீட்டில் எனக்கு பங்கு இல்லை என்றால் அந்த வீட்டில் வைத்து ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். இல்லை எனில் குடும்பத்தோடு தற்கொலை செய்ய அனுமதி அளியுங்கள். எங்களை குடும்பத்தோடு எதிர்தரப்பினர் கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர் என்று கூறிஉள்ளனர்.

மேலும் செய்திகள்