கயத்தாறு அருகே வாலிபர் எரித்துக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை

கயத்தாறு அருகே வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

Update: 2017-10-16 20:45 GMT

கயத்தாறு,

கயத்தாறு அருகே வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எரிந்த நிலையில் உடல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த நாகலாபுரம் விலக்கு பகுதியில் நேற்று காலையில் ஆண் ஒருவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆதம் அலி, முத்துமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கையில் இரும்பு காப்பு

உடல் எரிந்த நிலையில் கிடந்த அந்த நபருக்கு 33 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நபரை, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர். இறந்து கிடந்தவர் அணிந்து இருந்த ஆடைகள் சிறிதளவு எரியாமல் இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இறந்து கிடந்தவர் காக்கி நிற பேண்டும், வெள்ளை நிறத்தில் கோடு போட்ட சட்டையும் அணிந்து இருந்தது தெரிய வந்தது. அவரது இடது கையில் இரும்பு காப்பு அணிந்து இருந்தார். கொலை செய்யப்பட்டவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்டவரது முகம் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையாக இருந்தது. இதனால் அவர் யார்? என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்