மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி மையம் டெங்குவை ஒழிக்க மாநில அரசுக்கு ஒத்துழைக்கவில்லை

புதுவையில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி மையம் டெங்குவை ஒழிக்க மாநில அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-15 23:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் புதுவை சட்டசபை வளாகத்தில் கேபினெட் அறையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை நேற்று மாலை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநில அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவத் துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகின்றனர். மருத்துவ உபகரணங்களும் ஓரளவு உள்ளது. டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு முதல் தவணையாக ரூ.30 கோடி ஒதுக்கித்தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறையிடம் மனு கொடுத்துள்ளேன். அரசு, நலவாழ்வு சங்கம் போன்றவை இணைந்து டெங்குவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குழுவினர் கூறி உள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி மையம் கொசு ஒழிப்பு தொடர்பாக மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் கூறியுள்ளேன். புதுச்சேரியில் தமிழக பகுதியை சேர்ந்த சுமார் 40 சதவீதம் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குனர் கல்பனா பர்வா நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரியில் டெங்கு அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இதுதொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும், என்றார்’

அதையடுத்து மத்திய குழுவினர் கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார்கள்.

மேலும் செய்திகள்