நவநிர்மாண் சேனாவில் இருந்து சிவசேனாவிற்கு தாவிய கவுன்சிலர்களுக்கு தலா ரூ.5 கோடி லஞ்சம்

மும்பை மாநகராட்சி சிவசேனா கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி மேயர் பதவியை சிவசேனா தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

Update: 2017-10-15 23:45 GMT
மும்பை,

இந்த நிலையில் கடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா எழுச்சி சிவசேனாவுக்கு மிரட்சியை ஏற்படுத்தியது. 84 வார்டுகளை கைப்பற்றி சிவசேனா தனிபெறும் கட்சியாக திகழ்ந்தாலும், பா.ஜனதாவும் 82 வார்டுகளை தன்வசப்படுத்தியது.

இருப்பினும் பா.ஜனதா போட்டியில் இருந்து விலகியதால் சிவசேனா எளிதாக மேயர் பதவியை கைப்பற்றியது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாண்டுப் மேற்கு 116-வது வார்டு இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதால் அதன் பலம் 83-ஆக அதிகரித்தது.

பா.ஜனதாவும், சிவசேனாவும் நீண்டகால கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் தற்போது எதிரும், புதிருமாக செயல்பட்டு வருவதால் மும்பை மாநகராட்சியில் சிவசேனாவின் அதிகாரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நவநிர்மாண் சேனாவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் சிவசேனாவிற்கு கட்சி தாவினர். இதன்மூலம் மும்பை மாநகராட்சியில் சிவசேனா தனது பலத்தை அதிகரித்து கொண்டது.

இதற்கிடையே சிவசேனாவின் இந்த அதிரடி நடவடிக்கை அக்கட்சியின் தலைவரான உத்தவ்தாக்கரே மற்றும் அவரது உறவினரான நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே இடையே விரிசலை அதிகரித்துள்ளது. கட்சி தாவிய தங்களது கவுன்சிலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பணபலத்தின் மூலம் எங்கள் கட்சி கவுன்சிலர்களை அவர் பக்கம் இழுத்துள்ளார். கட்சிதாவிய கவுன்சிலர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டு உள்ளது.

நான் தான் அவர்களை சிவசேனாவுக்கு ஆதரவளிக்க அனுப்பிவைத்தேன் என்று கூறுவது சரியல்ல. இதுபோன்ற அழுக்குபடிந்த அரசியல் தான் நான் சிவசேனாவில் இருந்து வெளியேறியதற்கு காரணம். இதை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன். மறைந்த தலைவர் பால் தாக்கரே இதுபோன்ற தந்திரங்களை செயல்படுத்த ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்.
தற்போது மும்பை மாநகராட்சியில் ஒரேயொரு கவுன்சிலர் தான் எங்கள் வசம் உள்ளார். விலைபோக தயாரானவர்களை நான் என்ன செய்ய முடியும்.
இவ்வாறு ராஜ் தாக்கரே கூறினார்.

மேலும் செய்திகள்