திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி, பெண் பலி

திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி மற்றும் பெண் பலியானார்கள்.

Update: 2017-10-15 22:45 GMT
எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அணிமூர் பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). விவசாயியான இவர் தன் சகோதரருடன் இணைந்து ரிக் தொழிலும் செய்துவந்தார். இவருக்கு அம்சலட்சுமி (35) என்ற மனைவியும், தனுஸ்ரீ (13), சம்ரிதா (7) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செந்தில், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு காய்ச்சல் குறையாததால் ஈரோட்டில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 13-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்து போனார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல இவரது ரிக் வண்டியில் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோகு பந்து (40) என்பவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் சரியாகாததால் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அணிமூர் பகுதியில் பலருக்கும் காய்ச்சல் இருப்பதாகவும் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாசம். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி மைதிலி (வயது 32). இவருக்கு கடந்த 4 நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் நேற்று முன்தினம் இரவு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மைதிலி பரிதாபமாக இறந்தார். மைதிலி இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. மைதிலிக்கு சவுமியா என்ற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர். 

மேலும் செய்திகள்