தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் பயணம் ரெயில்கள்-பஸ்களில் கூட்டம் அலைமோதியது

தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் பயணம் செய்ததால் ரெயில்கள்-பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

Update: 2017-10-15 22:15 GMT
தஞ்சாவூர்,

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி பண்டிகை. இந்த பண்டிகை தீபங்களின் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடையும், பலகாரங்களும் தான் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுதினம்(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தஞ்சை காந்திஜி சாலை மற்றும் அண்ணா சிலை பகுதி, தெற்குஅலங்கம், தெற்குவீதி, கீழவாசல், பனகல் கட்டிடம் செல்லும் சாலைகளில் நேற்று ஜவுளிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளிக்கான புத்தாடைகளை வாங்கி சென்றனர். ஆடைகள், காலணிகள், குடைகள் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் தரைக்கடைகள் போடப்பட்டு இருந்தன.

தஞ்சை காந்திஜிசாலை வழியாக சென்ற பஸ்கள் நேற்று மதியத்திற்கு மேல் கோர்ட்டு சாலை, பெரியகோவில் சாலை வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் காந்திஜிசாலையில் அனுமதிக்கப்பட்டன. தரைகடைகளிலும் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதே போல் பட்டாசு கடைகளுக்கு மக்கள் வந்து பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி சென்றனர். தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ஜவுளி எடுப்பதற்காகவும், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காகவும் தஞ்சைக்கு வந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அலைமோதல்

மேலும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமானோர் பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் தஞ்சையில் இருந்து வெளியூருக்கு சென்ற பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. ரெயில்களிலும், பஸ்களிலும் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில்களிலும், பஸ்களிலும் யாராவது பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என போலீசார் சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி கூட்டநெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிடக்கூடாது என்பதற்காக பழைய பஸ் நிலையம், காந்திஜிசாலை போன்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, போலீஸ் உதவி மையத்தில் வைக்கப்பட்டுள்ள அகன்ற டி.வி. மூலம் போலீசார் கண்காணித் தனர்.

விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தீயணைப்பு வீரர்கள் சார்பிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் கூறும்போது, கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மட்டும் காந்திஜிசாலையில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இன்று(நேற்று) மதியத்திற்கு மேல் பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டன. நாளை(இன்று) கூட்டம் குறைவாக இருந்தால் வழக்கம்போல் காந்திஜிசாலையின் வழியாக பஸ்கள் இயக்கப்படும். கூட்டநெரிசலை பயன்படுத்தி நகை, பொருட்களை யாரும் திருடி சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். 

மேலும் செய்திகள்