கிள்ளை அருகே மர்ம காய்ச்சலுக்கு லாரி டிரைவர் பலி

கிள்ளை அருகே மர்ம காய்ச்சலுக்கு லாரி டிரைவர் பலியானார்.

Update: 2017-10-15 23:00 GMT
பரங்கிப்பேட்டை,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுமட்டுமின்றி பலியாவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலாலும், மர்ம காய்ச்சலாலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் சுகாதாரத்துறை கணக்கீட்டின் படி டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 5 பேரும் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி நேற்றைய நிலவரப்படி டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்ட 22 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 186 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று காலையில் இறந்தார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கிள்ளை அருகே உள்ள பொன்னந்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் உலகநாதன்(வயது 33), லாரி டிரைவர். இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை உலகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மர்மகாய்ச்சலால் உயிரிழந்த உலகநாதனுக்கு உஷா என்கிற மனைவியும், 1 ஆண், 1 பெண் குழந்தைகளும் உள்ளனர். 

மேலும் செய்திகள்