தீர்த்தஹள்ளி அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயற்சி வாலிபர் கைது

தீர்த்தஹள்ளி அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-15 21:45 GMT

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கோனந்தூர் கிராமம் சொனகாரத் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 24). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மைனர் பெண், ராகுலுடன் நட்போடு பழகி வந்துள்ளார். ஆனால் ராகுல், மைனர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும், அவர் அந்த மைனர் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராகுல், மைனர் பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால், திருமணத்திற்கு மைனர் பெண் மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7–ந் தேதி, மைனர் பெண்ணை திருமணம் செய்வதற்காக அவரை ராகுல் கடத்தி சென்றுள்ளார்.

அவரை மங்களூருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ராகுல் சிறை வைத்திருந்தார். இந்த நிலையில் தங்களது மகளை ராகுல் கடத்தி சென்றது பற்றி அறிந்த மைனர் பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மங்களூருவுக்கு விரைந்து சென்று, மங்களூரு போலீசார் உதவியுடன் அங்குள்ள தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மங்களூருவில் ஒரு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் பெண்ணை போலீசார் மீட்டனர். முன்னதாக ராகுல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீஸ் விசாரணையில், ராகுல், மைனர் பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக ராகுலை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராகுலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்