ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்று கால்வாயில் தூர் வாரும் பணிகள் தொடக்கம்

ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்று கால்வாயில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன.

Update: 2017-10-15 23:15 GMT

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும்.

இதை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937–ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் மீது தடுப்பணை கட்டினர்.

இந்த தடுப்பணையில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு கால்வாய் மூலம் பாசனத்துக்கு தணணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த கால்வாய் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் பாயாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் சுருட்டப்பள்ளி தடுப்பணைக்கு அருகே உள்ள ஓடைகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை ஏரிக்கு திறந்து விட உள்ளனர். இதை கருத்தில் கொண்டு கால்வாயில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் மேற்பார்வையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்