தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கரும்பு கடத்தினால் கடும் நடவடிக்கை

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கரும்பு கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-10-15 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2017–18–ம் ஆண்டு அரவை பருவம் கடந்த 2–ந்தேதியன்று தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குள் பதிவு செய்துள்ள கரும்பை பிற மாநிலங்களுக்கு மற்றும் தமிழ்நாடு தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கடத்தி செல்ல சில இடைத்தரகர்கள் திட்டமிட்டுள்ளனர் என்ற ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ள கரும்பை அறுவடை செய்யும்போது விவகார எல்லைப்பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கரும்பு கடத்துவதை தடுக்க கண்காணிப்பு கூட்டம் திருவள்ளூரில் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் கரும்பு கடத்தலை தடுக்க வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, வேளாண்மைத்துறை போலீசார் மற்றும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழக எல்லைப்பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கரும்பு கடத்துவதை தடுக்க பொன்பாடி, சிவாடா, நொச்சிலி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை மற்றும் சின்ன ஓபுலாபுரம் போன்ற இடங்களில் அமைக்கப்படும் சுங்கச்சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

சுங்கச்சாவடிகளில் ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் கண்காணிப்பு பணிக்கு ஈடுபடுத்த சம்பந்தப்பட்ட துறையினர் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட கரும்பு துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட கரும்பை அரவை ஆலைக்கு எடுத்து செல்லவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து பிறமாநிலங்களுக்கு கரும்பு கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்