மரமும்.. மழலையும்..

101 மரக்கன்றுகளை நடவு செய்து தங்களுடைய குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக் கிறார்கள், புனேவை சேர்ந்த தம்பதியர். அவர்களுடைய பெயர் ரஞ்ஜித்-நேஹா.;

Update:2017-10-15 12:30 IST
101 மரக்கன்றுகளை நடவு செய்து தங்களுடைய குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக் கிறார்கள், புனேவை சேர்ந்த தம்பதியர். அவர்களுடைய பெயர் ரஞ்ஜித்-நேஹா.

ரஞ்ஜித், சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். நேஹா பேராசிரியராக பணிபுரிகிறார். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மல்சிராஸ் கிராமம் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. தங்கள் குழந்தையின் பெயர்சூட்டும் விழாவின் ஒரு அங்கமாக அந்த வறண்ட பூமியில் பசுமையை விதைக்கும் நோக்கில் அங்கு வேம்பு, மா, மூங்கில், அத்தி, புளி, தென்னை உள்ளிட்ட 101 மரங்களை நடவு செய்திருக்கிறார்கள். தங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்களையே இந்த மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அவர்களும் மகிழ்ச்சியாக மரக்கன்றுகளை நடவு செய்து குழந்தையை வாழ்த்தினார்கள். அக்குழந்தைக்கு அலிஷா என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இதுபற்றி ரஞ்ஜித் கூறுகையில், ‘இயற்கை நமக்கு எல்லா விதத்திலும் துணை நிற்கிறது. அடுத்த தலைமுறைக்கு அவற்றின் பயன்பாடு முழுமையாக கிடைக்கவேண்டும். நான் உறவினர்களிடம் மரக்கன்று நடும் திட்டத்தை சொன்னபோது ஆமோதித்தார்கள். எங்களுக்கு பக்க பலமாக இருந்து மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு உதவி செய்தார்கள். அதனால்தான் திட்டமிட்டபடி மரக்கன்றுகளை நடவு செய்ய முடிந்தது. அவற்றை பராமரிப்பதுதான் அதைவிட மிகவும் முக்கியம்” என்கிறார்.

இந்த தம்பதியர் வாரந்தோறும் சென்று மரக்கன்றுகளை பராமரிக்கவும் செய்கிறார்கள். அதற்கு உள்ளூர் மக்களும் ஆதரவாக இருக்கிறார்கள். மாணவர்களிடம் மரக்கன்றுகளை கொடுத்து பள்ளி வளாகத்தில் நடவு செய்யவும் வைத்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்