மராட்டிய மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் மகாதேவ் செலார் தூக்குப்போட்டு தற்கொலை

மராட்டிய மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் மகாதேவ் செலார் தற்கொலை செய்து கொண்டார். அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.;

Update: 2017-10-14 23:06 GMT
மும்பை, 

மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மகாதேவ் செலார் (வயது 64). இவர் மும்பை முல்லுண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று மதியம் தனது வீட்டில் இருந்த மகாதேவ் செலார் திடீரென ஒரு அறைக்குள் சென்று கயிற்றில் தூக்குப்போட்டு கொண்டார். இதில் அவர் கயிற்றில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

தற்கொலை

இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக ஓடிச் சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக முல்லுண்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு மகாதேவ் செலார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி தகவல் அறிந்த முல்லுண்டு போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மகாதேவ் செலாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாதேவ் செலார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

மகாதேவ் செலாரின் தற்கொலை குறித்து முல்லுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் கடிதம் ஏதும் எழுதி வைத்திருந்தாரா? என்பதை கண்டறிய போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

ஆனால் அவ்வாறு கடிதம் ஏதும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். மகாதேவ் செலார் வக்கீல் ஆவார். அவரது மரணத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் இரங்கல் தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்